Monday, June 6, 2011

வீ.கே.புதூர் கல்லூரியில் இலவச சிகிச்சை மையம் திறப்பு

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்பதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு இலவச சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 31ம் நாள் புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையில் 4,000 விதமான நச்சுப் பொருட்கள் உள்ளன. இதில் 56 வகைகள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. ஒரு சிகரெட் மனிதனின் வாழ்நாளில் 7 நிமிடத்தை குறைக்கிறது. இந்தியாவில் தினமும் 2,500 பேர் புகையிலை பயன்படுத்தியதால் இறக்கின்றனர். புகையிலை புகைப்பவர்களை மட்டுமன்றி சுவாசிக்கின்ற மற்றவர்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புகையிலை ஒழிப்பு தினம் வீ.கே.புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரியில் கடைபிடிக்கப்பட்டது. புகையிலை ஒழிப்பு இலவச சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மரியதங்கராஜ் மையத்தை திறந்து வைத்து புகையிலையினால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசினார். தொடர்ந்து செவிலியர் கல்லூரி மற்றும் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தி, கோஷங்களை எழுப்பி ஊர்வலம் வந்தனர். புகையிலை பயன்படுத்துவோர் குறித்து சர்வே எடுக்கப்பட்டு விபரம் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வேலை நாட்களிலும் புகையிலையை பயன்படுத்துவோருக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும் என நர்சிங் பயிற்சிக் கல்லூரி முதல்வர் ஏஞ்சல்ராணி தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர் 

Thursday, June 2, 2011

வருவாய் தீர்வாய முகாம் வீ.கே.புதூரில் 8ல் துவக்கம்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய முகாம் 8ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது. வீரகேரளம்புதூர் தாலுகாவில் குறுவட்ட அளவிலான 1420ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய முகாம் நடைபெறுகிறது. இதில் வருவாய்த்துறை தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். தினமும் காலை 9 மணிக்கு துவங்கும் இம்முகாமில் வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கலந்து கொள்கிறார். வரும் 8ம் தேதி சுரண்டை குறுவட்டத்தில் அடங்கிய சுரண்டை பகுதி1 மற்றும் 2, சிவகுருநாதபுரம், ஆனைகுளம், குலையநேரி, ஜமீன், சுரண்டை பகுதிகளுக்கும், 9ம் தேதி வீரகேரளம்புதூர் குறுவட்டத்தில் அடங்கிய வெள்ளகால், வீரகேரளம்புதூர், ராஜகோபாலப்பேரி, அகரம், வீராணம் பகுதிகளுக்கும் நடக்கிறது. 10ம் தேதி கருவந்தா குறுவட்டத்தில் அடங்கிய மேலக்கலங்கல், கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணாபுரம், குறிச்சாம்பட்டி, கருவந்தா, வாடி, அச்சங்குட்டம் பகுதிகளுக்கும், 14ம் தேதி ஊத்துமலை குறுவட்டத்தில் அடங்கிய வடக்கு காவலாகுறிச்சி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்காலன்குளம், முத்தம்மாள்புரம் கிராமங்களுக்கும் நடக்கிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தாசில்தார் மணிபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி : தினமலர் 

Sunday, May 29, 2011

வீ.கே.புதூரில் மக்கள் நலப்பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூரில் மக்கள் நலப்பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். வீரகேரளம்புதூர் பஞ்., மக்கள் நலப்பணியாளராக பணிபுரிபவர் ஸ்டெல்லாமேரி. இவரிடம் இதே ஊரில் லோடுமேன் வேலை பார்க்கும் சக்திவேல்முருகன் (38) செல்போனில் ஆபாசமாக பேசினாராம். இதுகுறித்து ஸ்டெல்லாமேரி போலீசில் தெரிவித்தார். போலீசார் சக்திவேல்முருகனை அழைத்து இதுபோல் இனி நடக்க கூடாது என கூறி அனுப்பினார்களாம். இந்நிலையில் ஸ்டெல்லாமேரியை வழியில் கண்ட சக்திவேல்முருகன், "போலீசிடமா போகிறாய், உன்னை வெட்டிக் கொன்றுவிடுவேன்' என மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மேரி மீண்டும் போலீசில் புகார் செய்தார். வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சீனியம்மாள் வழக்குபதிவு செய்து சக்திவேல்முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
நன்றி : தினமலர் 

Friday, May 27, 2011

குண்டும், குழியுமான புழுதி பறக்கும் சாலை : வீ.கே.புதூர் பொதுமக்கள் அவதி

வீரகேரளம்புதூர் : குண்டும், குழியுமான புழுதி பறக்கும் வீ.கே.புதூர் மெயின்ரோட்டை சீரமைக்க வேண்டுமென வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாலுகா தலைநகரமான வீரகேரளம்புதூர் சுரண்டை - நெல்லை மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம், கனரா பாங்க், தபால் அலுவலகம், இளநிலை மின்பொறியாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரி, தனியார் பால் பதப்படுத்தும் நிலையங்கள் ஆகியவை இங்கு இயங்கி வருகின்றன.
இதனால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், அருகிலுள்ள வீராணம் பகுதியில் அமைந்துள்ள காற்றாடி மின் உற்பத்தி நிலையங்களுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களும் இந்த ரோட்டை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் வாசுதேவநல்லூர் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் அமைக்கும் பணிக்காக ரோடு நெடுகிலும் குழி தோண்டப்பட்டது.
இக்குழிகள் சரிவர மூடப்படாததாலும், ரோடு சீரமைக்கப்படாததாலும் தாலுகா அலுவலகம் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை ரோடு முழுவதும் பல்லாங்குழிகளாவே காட்சியளிக்கிறது. கடந்த மழைக்காலத்தில் சகதி குளமாக காட்சி தந்த ரோடு, தற்போது புழுதி மண்டலமாக மாறிவிட்டது. குழாய்களின் இணைப்புகளில் அடிக்கடி தண்ணீர் கசிவு ஏற்படுவதால் மீண்டும் மீண்டும் தோண்டப்படுகிறது.
இதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துடனும், கவனத்துடனும் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வாகனங்கள் கடந்து செல்லும் போது உருவாகும் புகை மண்டலம் அலர்ஜி, ஆஸ்துமா, இளைப்பு போன்ற நோய்களை உருவாக்குகிறது. கடைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும், பயணம் செய்யும் பயணிகளும் குறிப்பாக முதியோர்களும் இதனால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
எனவே மீண்டும் மீண்டும் தோண்டாதவாறு குழாய்களில் கசிவை சீர்படுத்தி ரோட்டை செப்பனிட்டு புதிய தார்ரோடு அமைத்து தரவேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வீரகேரளம்புதூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் தேர்தலுக்கு முன் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இன்னும் ரோடு சரி செய்யப்படவில்லை. எனவே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த சங்கம் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் 

Saturday, May 14, 2011

தென்காசி - தொகுதி (வீரகேரளம்புதூர் தாலுக்கா )


திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். தொகுதி எல்லைக‌ள்: வீரகேரளம்புதூர் தாலுக்கா தென்காசி தாலுக்கா (பகுதி) குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு (ஆர்.எம்.), ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள், தென்காசி (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).1-வாக்குப்பதிவு சதவீதம்:
78.8%
மாவட்டம்
:
திருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள்
:
211903
ஆண் வாக்காளர்கள்
:
106025
பெண் வாக்காளர்கள்
:
105878
திருநங்கை வாக்காளர்கள்
:
0
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்
சரத்குமார்

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது:
சரத்குமார் - சமத்துவ மக்கள் கட்சி - 92253 - 
மற்றவர்கள் நிலவரம்:
கருப்பசாமி பாண்டியன் வீ. - தி.மு.க. - 69286
அன்புராஜ் எஸ்.வி. - பா.ஜனதா - 2698
நன்றி : மலை மலர் 

Monday, April 18, 2011

விவசாயம் செழிக்க விரைவான நடவடிக்கை : நம்மாழ்வார்.


"கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி' என்று போற்றப்படும் விவசாயிகள் நலன் பெறவும், விவசாயம் செழித்திடவும், அடுத்து அமையும் அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

வேளாண்மைக்கு அடிப்படையானது விளைநிலம். வேளாண்மைக்குரிய நிலங்களை வேளாண்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற பிற பயன்பாடுகளுக்கு, விளை நிலத்தை எடுப்பதை, முதலில் தடை செய்ய வேண்டும்.கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில், 100 நாள் வேலையை எப்போது செய்ய வேண்டும் என்பதை, கிராம சபைகள் முடிவு செய்ய வேண்டும். அப்போது தான், வேளாண்மை தொழிலை கிராம மக்கள் தடையில்லாமல் செய்ய முடியும்.தமிழகத்துக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் நதிநீர்ப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க, மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கைக்காக, அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு பார்லிமென்டை புறக்கணிக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அப்போது தான், கடைமடை விவசாயிக்கும் தாராளமாக நீர் சென்றடையும். இப்பணிகளை உழவர் பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள கருவேலம் மரங்களை அகற்ற வேண்டும். அப்போது தான், குளங்களில் தேக்கப்படும் நீரை, வேளாண்மைக்கு முழுமையாகப் பயன்படுத்த முடியும்.காவிரி ஆற்றில், கொள்ளிடம் பகுதியில், 17 கதவணைகளை அமைக்க வேண்டும் என, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன்மூலம், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, கதவணைகளை மூடியும், பிற சமயங்களில் திறந்தும் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியும். கடலை நோக்கிச் செல்லும் காட்டாற்று நீரை தேக்கி பயன்படுத்த, தடுப்பணைகள் கட்ட வேண்டியது அவசியம்.

பால், உரமாக பயன்படும் எருவை வழங்கும் மாடுகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை அரசு தடை செய்ய வேண்டும். கிராமப்புற ஆண்களும், பெண்களும் கொண்ட குழுக்களை அமைத்து, அக்குழுவிடம், மாடு வளர்ப்பதை ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நிதியுதவியும் வழங்க வேண்டும்.ஆறு, ஏரி, குளம் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் வகையில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே, இயங்கி வரும் ஆலைகள் குறித்து கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு முடியும் வரை, அந்த ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரி, குளங்களில் மீன் வளர்ப்புக்கு ஊக்கம் அளிப்பதோடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் அப்பணியை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், கிராமப்புற மக்களிடம் நிலவி வரும் சத்துணவு குறைபாடுகளைப் போக்க முடியும்.

தோட்டக்கலையில், சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்கள் மற்றும் மாம்பழம் போன்ற பழ வகைகள் சாகுபடியை பெருக்க வேண்டும். நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து பயிர்களையும் கொள்முதல் செய்ய புதிய மையங்களையும் தொடங்க வேண்டும்.
ஊராட்சிகளில் உழவர் ஆலோசனை மற்றும் சேவை மையங்களைத் தொடங்க வேண்டும். இதன் மூலமே, சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருள்கள் வழங்கலாம்; பயிர் சாகுபடி பற்றி ஆலோசனைகளை அளிக்கலாம்; வேளாண்மை கருவிகளை வழங்கலாம்.வெள்ளப்பெருக்கு காலங்களில், பயிர் சேதங்களைத் தடுக்க பாரம்பரியப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். ஒற்றை நாற்று முறை மூலம் நெல் உற்பத்தி 3 டன் முதல் 5 டன் எக்டேருக்கு அதிகரித்துள்ளது. இதை நாடு முழுவதும் பரப்புவதன் மூலம், அரிசி தட்டுப்பாட்டைப் போக்க முடியும். ஒற்றை நாற்று முறையை, மற்ற பயிர்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும்.

சோளம், கம்பு, தினை, சாமை போன்ற சத்துணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். தரிசாக உள்ள நிலங்களில், இதன் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கலாம்.தேசிய பல்லின பன்மை வாரியத்தை தமிழகத்துக்கு என அமைக்க வேண்டும். மரபின மாற்றுப் பயிர்களை தடை செய்ய வேண்டும். மாநில பட்டியலில் தான் வேளாண்மை உள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை மாநில அரசே செய்ய முடியும். மரபின மாற்றுப் பயிர்களால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர் குடிக்கும் நோய்கள் பரவும் என்பதால், அதன் ஆராய்ச்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.

கால்நடை மற்றும் விதைப் பண்ணைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், அதன் மூலம் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், மகளின் சுயஉதவிக் குழுக்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இயற்கை வேளாண்மை வெற்றியடைந்து வரும் இந்த வேளையில், அதை விரிவுபடுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.சொட்டுநீர், தெளிப்புநீர் பாசன வசதிகளை எற்படுத்த, 100 சதவீத மானியத்தையும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். ரசாயன உரங்களைப் பயன்படுத்த அளிக்கப்படும் மானியத்தை, இயற்கை வழி வேளாண்மையைச் செய்யும் விவசாயிக்கும் அளிக்க வேண்டும்.இவற்றை அடுத்து அமையும் அரசு விரைவாகச் செய்யுமானால், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?' என்ற பாடல் வரிகளை உண்மையாக்க முடியும்.

நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.

Thursday, April 14, 2011

காணாமல் போன " ஈயம் பித்தளை பேரீச்சைப்பழம் '

பழைய ஈயம், பித்தளைகளுக்கு பேரீச்சைபழம் தரும் வியாபாரம் காலத்தின் கோலத்தால் காணாமல் போய்விட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், வீடுகளில் உபயோகிக்கப்படும் பொருட்கள், பயனற்று போன நிலையிலும் பத்திரப்படுத்தப்படும். காலி சைக்கிளுடன் வரும் வியாபாரி, அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு, அதற்கு பதிலாக பேரீச்சம் பழம் உள்ளிட்ட உண்ணும் பொருட்களை கொடுப்பார். அடுத்த 30 நிமிடத்தில் தள்ளமுடியாத அளவுக்கு ஈயம், பித்தளை சாமான்களை சைக்கிளில் ஏற்றிச்செல்வார். குழந்தைகளுக்கு ஜவ் மிட்டாய், சீனி மிட்டாய் போன்றவை வழங்கப்பட்டன. இதற்காக அக்கம் பக்கத்தில் வசிப்போரின் பொருட்களை கூட குழந்தைகள் பதுக்கி வைத்து மிட்டாய் வாங்குவதும், பின்னர் விபரம் தெரிந்து அடிவாங்குவதும் தொடர்ந்தது. கால மாற்றத்தில் ஈயம், பித்தளை பயன்பாடு கணிசமாக குறைந்தது. ஆர்வமாய் இருந்த திண்பண்டங்கள், நாகரீக வளர்ச்சியில் முக சுழிப்பை ஏற்படுத்தின. இதனால் ஈயம், பித்தளை தேடி வந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர் .
பிளாஸ்டிக் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் பிரபலமானதால், வியாபாரிகளும் அதை சேகரிப்பதில் நாட்டம் காட்டினர். இம்முறை பண்டம் தருவதற்கு பதிலாக பணம் பெறப்பட்டது. இதனால், தமிழகத்தில் இருந்த ஒரே பண்டமாற்று முறையும் முடிவுக்கு வந்தது. இப்போதெல்லாம், "பழைய ஈயம், பித்தளைக்கு பேரீச்சை பழம்,' என்ற, வார்த்தையை கேட்க முடிவதில்லை.